தீபாவளி பண்டிகையையொட்டி அலைமோதும் கூட்டம் - போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித்தவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன.

Update: 2018-11-05 23:30 GMT
வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டித்தெருவில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இருப்பதால் அங்கு பொருட்கள் ஏற்றி, இறக்க வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். அதேபோன்று ஆற்காடு ரோடும் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள் புதிய ஜவுளி எடுக்கவும், பட்டாசுகள் வாங்கவும் நேற்று பஜாரில் குவிந்தனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

இதனால் பஜாரில் வாகனங்கள் நிறுத்தமுடியாமலும், செல்லமுடியாமலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மண்டித்தெருவில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பாதையின் ஓரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும் மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் சிக்கித்தவித்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மண்டித்தெரு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். மேலும் போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தும் சரி செய்யப்பட்டது.

இதேபோல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வேலூரில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு பஸ்களில் சென்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி செல்லும் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பலர் இடம் கிடைக்காமல் தவித்தனர். சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டதால் புதிய பஸ் நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி ரோடு, பழைய பஸ் நிலைய பகுதியில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்