சிதம்பரம் அருகே: ரெயில் மோதி வாலிபர் சாவு

சிதம்பரம் அருகே செல்போனில் பாட்டுகேட்டபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-11-05 22:15 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள மேற்கு மீதிகுடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் கவுதம்(வயது 19). இவர் நேற்று காலை 6.30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கந்தமங்கலம்-மீதிகுடி ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவர் செல்போனில் பாட்டு கேட்டபடி சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கவுதம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கந்தமங்கலம் ரெயில்வேகேட் கீப்பர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவுதமை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பத், குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்