கூடலூர் அருகே: ஓடும் காரில் திடீர் தீ; 2 பேர் உயிர் தப்பினர்

கூடலூர் அருகே ஓடும் காரில் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் உயிர் தப்பினர்.

Update: 2018-11-07 21:30 GMT
கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கோட்டைக்கான் அவுஸ் கம்பலக்காடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது உறவினர் ஒருவருடன் மலப்புரம் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். காரை அபுபக்கர் சித்திக் ஓட்டினார். பின்னர் கூடலூர் வழியாக மீண்டும் வயநாடு மாவட்டத்துக்கு இரவு 9 மணிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கூடலூர் அருகே உள்ள பாடந்தொரை பகுதியில் கார் சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வரத்தொடங்கியது. இதனால் பயந்து போன அபுபக்கர் சித்திக் காரை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் தனது உறவினரை அழைத்து கொண்டு காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் தள்ளி நின்றனர். இந்த சமயத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தார்.

பின்னர் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கூடலூர் நிலைய அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக காரை விட்டு வெளியே வந்ததால் அபுபக்கர் சித்திக் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் உயிர் தப்பினர். இது குறித்து தீயணைப்பு படையினர் கூறும்போது, காரின் குளிரூட்டும் எந்திரத்தில் இருந்து பழுது ஏற்பட்டு தீ பரவி இருக்கலாம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்