டேங்கர் லாரி மோதி விபத்து: கட்டிட தொழிலாளி தலை நசுங்கி சாவு

கிணத்துக்கடவில் டேங்கர்லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-11-07 21:30 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரைச்சேர்ந்தவர் முருகன்(வயது 43). கட்டிடதொழிலாளி. இவரது நண்பர் முத்துச்சாமி. சம்பவத்தன்று இருவரும் கோவைக்கு கட்டிடவேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி வந்தார். கிணத்துக்கடவு வந்த போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இதில் முருகனும், முத்துசாமியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது முத்துச்சாமி தலைமீது டேங்கர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்துச்சாமி தலை நசுங்கி துடி துடித்து இறந்தார். முருகன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ்- சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ஞானமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முத்துச்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர்லாரி டிரைவர் இருகூரை சேர்ந்த சதீஸ் (41) என்பவர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்