தஞ்சை மாவட்டத்தில் கடல் சீற்றம்: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தஞ்சை மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-11-07 22:30 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் என சுமார் 4,000 நாட்டுபடகுகள் உள்ளன. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன. இதில் விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும் மற்ற தினங்களில் நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம்போல நேற்றுமுன்தினம் கடலுக்கு செல்ல வேண்டிய விசைப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவேண்டிய நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மீன்வளத்துறையினர் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை. எனவே தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்