சரக்கு வேன் மோதி விபத்து: ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 தொழிலாளர்கள் பலி

மோகனூர் அருகே ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 தொழிலாளர்கள் சரக்கு வேன் மோதி பலியானார்கள்.

Update: 2018-11-07 23:00 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் புதூர் ஆயக்கால்புதூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). இவருடைய தாய்மாமன் சின்னு என்ற சின்னான் (72) நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதையடுத்து கனகராஜூம், அவருடைய உறவினர் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டனும் (34) துக்க வீட்டில் ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (36), புதுச்சத்திரம் அடுத்துள்ள தத்தாத்திரிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (51) ஆகியோர் ஒரு ஸ்கூட்டரிலும் மோகனூருக்கு இரவில் சாப்பிட சென்றனர்.

அங்கு அவர்கள் சாப்பிட்டு விட்டு ஒருவந்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தங்கள் இருசக்கர வாகனங்களில் திரும்பி வந்தனர். சுண்டக்காசெல்லாண்டியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. அதேநேரத்தில் ஒருவந்தூரில் இருந்து மோகனூர் நோக்கி ஓவியராஜ் (23) என்பவர் சரக்கு வேனை ஓட்டிக்கொண்டு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் அவர்கள் 4 பேரும் வந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்கள், சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றன. இருசக்கரவாகனங்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் குற்றுயிராக கிடந்தனர். இந்த கோர விபத்தில் மணிகண்டன், கனகராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதனிடையே அந்த வழியே வந்தவர்கள் மற்ற இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் செல்வராஜ் நாமக்கல் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்து இரண்டு கால்களும் ஒடிந்த நிலையில் கண்ணன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் ஓவியராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

விபத்தில் பலியான, 3 பேரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களில் கனகராஜூக்கு லீலாவதி (47) என்ற மனைவியும், சத்யா (21), ஜமுனாராணி(16) என்ற மகள்களும், ஜெயச்சந்திரன்(18) என்ற மகனும் உள்ளனர். இதில் சத்யா, நாமக்கல் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி., முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். மற்றொரு மகள் ஜமுனாராணி மோகனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் ஜெயச்சந்திரன் தந்தையுடன் கல் உடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

விபத்தில் இறந்த மணிகண்டனுக்கு ரஞ்சிதா(22) என்ற மனைவியும், மவுசிகா (6) என்ற மகளும் உள்ளனர். மவுசிகா அங்குள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

செல்வராஜூக்கு, லதா(31) என்ற மனைவியும், உமா என்ற மகளும், ஆனந்தன் என்ற மகனும் உள்ளனர். ஒருவந்தூரில் உள்ள அரசு பள்ளியில் உமா 10-ம் வகுப்பும், ஆனந்தன் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை அன்று உறவினரின் துக்க வீட்டு ஏற்பாடுகளை கவனித்து வந்த உறவினர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்