டெங்கு பரவாமல் தடுக்க மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்

டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

Update: 2018-11-07 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனைகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் போன்றவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்நோயாளிகள் அறையை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை விரிப்புகள், தலையணை உறைகளை லைசால் கொண்டு ½ மணி நேரம் ஊற வைத்து துவைத்து வெயிலில் உலர்த்தி பயன் படுத்த வேண்டும்.

திருமண மண்டபம், திரையரங்குகள், சமுதாய கூடம்,வணிக வளாகங்கள், தங்கும்விடுதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் பஸ்களையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன்பேரில் அவர்கள் நலம் பெற்று வீடு திரும்பினர்.

எனவே, பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறிளார்.

கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, மருத்துவப்பணிகளின் இணை இயக்குனர் விஜயகுமார், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்