விபத்தில் மூளைச்சாவு: பிளஸ்-2 மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்-2 மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2018-11-07 22:30 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த கோவில்பதாகை இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல்நாதன் (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 30-ந் தேதி மாலை நாகராஜ், தனது மகன் கோகுல்நாதனுடன் மோட்டார்சைக்கிளில் ஆவடிக்கு சென்றுகொண்டிருந்தார். கோவில்பதாகை மெயின் ரோட்டில் வரும்போது திடீரென நிலைதடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் நாகராஜ், லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடைய மகன் கோகுல்நாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் உறுப்புகள் தானம்

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் கோகுல்நாதன், கடந்த 5-ந் தேதி மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு கதறி அழுத கோகுல்நாதனின் பெற்றோர், பின்னர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவர் கோகுல்நாதன் உடலில் இருந்து இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் தானமாக எடுத்தனர். இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்