சேலம் அருகே கோஷ்டி மோதலில் குடிசைக்கு தீ வைப்பு 6 பேர் கைது

சேலம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் குடிசைக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-07 22:22 GMT
சேலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- சேலம் மாவட்டம் வீராணம் பச்சியம்மன் நகரில் பொது சுகாதார வளாகம் அமைப்பதில் இரண்டு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அமர்ந்து மது குடித்தனர். இதை மற்றொரு தரப்பை சேர்ந்த பெண் ஒருவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மது குடித்து கொண்டிருந்த இளைஞர்களுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்ததால் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் நடந்தது.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள குடிசையின் மேற்கூரையை சிலர் பிரித்து எறிந்து அதற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் குடிசை சேதமானது. இந்த மோதலில் கவுதமன் (வயது 27), மற்றொரு தரப்பைச் சேர்ந்த தனம் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை சேர்ந்த தலா 3 பேர் வீதம் மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்