சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2018-11-07 22:37 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் சேலம் திரிவேணி அரங்கில் நேற்று நடந்தது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதை மற்றும் சுயகவுரவத்துடன் வாழ்வதற்கு அரசு சார்பாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு பணி கிடைக்காத பட்சத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கன் மற்றும் தனியார் பள்ளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் வகையில் பணி வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம் கலந்து கொண்டு படித்த மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் வழங்கவும், முன்னோடி வங்கி மூலமாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்புப் பயிற்சிகள் பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முடிவில், வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்