மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: அரசு பஸ் மோதி வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்

சூலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-07 22:00 GMT
சூலூர்,


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கவுதம் (வயது 20). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது நண்பர்கள் விஜய் (21), தீபக் (21). இவர்கள் 3 பேரும் நேற்று காங்கேயம்பாளையத்தில் இருந்து சூலூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ், அவர்கள் 3 பேர் மீதும் கண்இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜய், தீபக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த விஜய், தீபக் ஆகியோர் சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போக் குவரத்தை சீரமைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விபத்து நடைபெற்ற இடம் மிகவும் குறுகலாக உள்ளது. எனவே இங்கு சாலையை அகலப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்