பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.

Update: 2018-11-08 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் நகரசபை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு நகர்நல அதிகாரி கின்சால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:–

பன்றி காய்ச்சல் கடந்த 2010–ம் ஆண்டு முதல் பரவி வருகிறது. மழை காலம், குளிர் காலங்களில் வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் 3 அடி தூரம் தொலைவில் நின்று தான் பேச வேண்டும். வர்த்தக நிறுவனங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மக்கள் அதிகமாக வரும் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் உள்ள தரைகள், கைப்பிடிகள், கிரில்கள் போன்றவற்றை லைசால் அல்லது ‘சர்ஜிக்கல் ஸ்பிரிட்‘ என்று சொல்லக்கூடிய கிருமி நாசினியைக் கொண்டு துடைக்க வேண்டும்.

டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடி பராமரிக்க வேண்டும். மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை கழுவி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடனே விடுமுறை வழங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதேவன்பிள்ளை, ராஜா, ஜோஸ், சத்தியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்