நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Update: 2018-11-08 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பரவலாக மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. காலையில் இருந்தே வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. பகல் 12 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை 2 மணி வரை தொடர்ந்து பெய்தது. பின்னர் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலைகளில் நடந்து சென்றனர்.

நீர்மட்டம் உயர்வு

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம் அணை நீர்மட்டம் 118.60 அடியில் இருந்து 119 அடியாக நேற்று உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 695 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 131 அடியில் இருந்து 132.02 அடியாக உயர்ந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.20 அடியில் இருந்து 96.50 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதேபோல் 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணை நீர்மட்டம் 74.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரக்கூடிய 70 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 69.25 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வரக்கூடிய 30 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளது.

கருப்பாநதி-குண்டாறு

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நேற்று காலை 69 அடியாக இருந்தது. இதுதவிர குண்டாறு அணை 36.10 அடிக்கு நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 26 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.63 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 41 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 107 அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்பை -2, சேரன்மாதேவி -4, மணிமுத்தாறு -4, நாங்குநேரி -5, பாளையங்கோட்டை -5, பாபநாசம் -9, ராதாபுரம் -9, செங்கோட்டை -5, தென்காசி -2.

மேலும் செய்திகள்