வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-11-08 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

உதவித்தொகை திட்டம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி அல்லது தபால் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகள்

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஆசிரியர் காலனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதிக்குள் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்