ராமநாதபுரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை கணவர் வெறிச்செயல்

ராமநாதபுரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-11-09 00:00 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நாட்டில் வேலை பார்த்து வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மும்தாஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வந்துள்ளனர். மும்தாஜுக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்து போனதால் இங்கேயே பல லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கு கலைவாணி (11) என்ற மகள் உள்ளார். முனியசாமி சொந்தமாக பைபர் படகு வாங்கி உள்ளூரிலேயே மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கணவன்-மனைவி இடையே சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்தாஜ் தனது கணவர் மீது தேவிபட்டினம் போலீசிலும் புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில் மும்தாஜ் தினமும் அதிகாலையில் எழுந்து தனது மகள் பள்ளிக்கு செல்வதற்கு உணவு சமைத்து கொடுப்பாராம். இதேபோல நேற்று காலை 6 மணியளவில் மும்தாஜ் வழக்கம் போல வீட்டின் பின்புறம் உள்ள சமையலறைக்கு சென்று உணவு சமைப்பதற்காக காய்கறிகள் வெட்டிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த முனியசாமி காய்கறி நறுக்கிகொண்டிருந்த மும்தாஜிடம் இருந்து கத்தியை பறித்து தனது மனைவி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். உடனே சமையலறையின் கதவை பூட்டிவிட்டு முனியசாமி யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி விட்டார்.

இதனிடையே பள்ளிக்கு செல்வதற்காக அவருடைய மகள் கலைவாணி சீருடைகளை அணிந்துவிட்டு தாயாரை பார்ப்பதற்காக சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது கதவு பூட்டிக்கிடப்பதையும், அந்த அறையில் இருந்து ரத்தம் வடிந்து வந்ததையும் கண்டு அதிர்ச்சிஅடைந்துள்ளார்.

உடனே சிறுமி, கொத்தனாரான தனவேல் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த அவர் இதுபற்றி முனியசாமியின் பெற்றோர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி மற்றும் கிராம பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் முனியசாமியின் வீட்டிற்கு சென்று சமையறையின் பூட்டை உடைத்து பார்த்த போது அங்கு மும்தாஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர்கள் இதுபற்றி தேவிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை சூப்பிரண்டு நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அங்கு போலீசார் தில்லைமுத்து, சபரிநாதன் தலைமையில் மோப்பநாய் ரோமியோ வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது மோப்பநாய் புதுக்குடியிருப்பு பள்ளிக்கூடம் வரை சென்று நின்று விட்டது. பின்னர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடீஸ்வரியான மும்தாஜுக்கு ராமநாதபுரம், திருச்சி பகுதியில் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்துள்ளார். கோவில்களுக்கும் நன்கொடை வழங்கி வந்தாராம். இதையடுத்து மும்தாஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அப்பகுதி கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்