பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் வருகிற 12-ந் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2018-11-08 22:30 GMT
வாலாஜா,

வாலாஜாவில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாலாஜா படவேட்டம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று கருப்பு பணம் ஒழிக்க பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவித்த நாள். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கருப்பு பணம், கள்ள பணம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

பணமதிப்பிழப்பு இந்திய வரலாற்றிலேயே சுதந்திரத்திற்கு பின்னர் மாபெரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ஆகும். இதனால் கருப்பு பணம், லஞ்ச ஊழல் ஒழிக்கப்பட்ட நாளை போற்றும் வகையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் மீது தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை கண்டித்தும் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 12-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் ரதயாத்திரை வருகிற 11-ந் தேதி சென்னை தாம்பரத்தில் தொடங்குகிறது.

சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கிய இலவச பொருட்களை உடைக்கும் விஜய், கருணாநிதி வழங்கிய இலவச டி.வி.யை ஏன் உடைக்கவில்லை. இதற்கு அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் விஜய்க்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்