விசாரணைக்காக அழைத்து சென்றவரை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

போச்சம்பள்ளியில் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றவரை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-09 22:30 GMT
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). அதேபகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (55). தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த சீனிவாசன், மாதம்மாள், மாது, சத்தியா, கோவிந்தராஜ், சின்னதங்கம், தேவி உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்து போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகராறு தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். இதையறிந்த போச்சம்பள்ளி போலீசார் தகராறை சமாதானம் செய்ய முயன்ற மாதையனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் மாதையனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று போச்சம்பள்ளி 4 ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்