கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி - 55 குழந்தைகளுக்கு சிகிச்சை

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-11-09 22:00 GMT
கோவை,


கோவையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அனு மதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் தீராத காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால், அருகே உள்ள கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் முறையாக சிகிச்சை பெறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அத்துடன் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூலூர் அருகே உள்ள ராவத்தூரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி புஷ்பாவுக்கு (வயது 38) கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதற்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே புஷ்பா பரிதாபமாக இறந்தார்.

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவருடைய மனைவி காயத்ரி (28). இவருக்கு தீராத காய்ச்சல் இருந்தது. அதற்காக சிகிச்சை பெற சென்ற போது அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

கோவை ராம்நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவருக்கும் காய்ச்சல் இருந்ததால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலையில் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்தது. உடனே அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். அவர் பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப் பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ராம்நகர் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் காய்ச்சலுக்கு 55 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்