பண மதிப்பு நீக்க நடவடிக்கை: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், திருச்செங்கோட்டில் நடந்தது

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசை கண்டித்து நாமக்கல், திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-11-09 23:00 GMT
நாமக்கல்,
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரப்பன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், பாச்சல் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் நகர தலைவர் ராம்குமார் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3-ம் ஆண்டு தொடங்கியும், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் பாதிப்பில் இருந்து வெளிவர முடியாத சூழ்நிலை உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தாமு நன்றி கூறினார்.

இதே போல் மத்திய அரசை கண்டித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.டி.தனகோபால் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, நகர தலைவர் செல்வகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்