கோவில்பட்டியில் பைபர் இணையதள சேவை தொடக்கம்

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், பைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டது.

Update: 2018-11-09 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், பைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டது.

பைபர் இணையதள சேவை

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து, பைபர் இணையதள சேவையை தொடங்கியது. இதன் தொடக்க விழா, கோவில்பட்டி-பசுவந்தனை ரோட்டில் உள்ள தனியார் கேபிள் டி.வி. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜிகுமார் தலைமை தாங்கி, பைபர் இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் விரைவில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக பைபர் இணையதள சேவை காயல்பட்டினத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2-வதாக கோவில்பட்டியில் பைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் பைபர் இணையதள சேவை விரைவில் தொடங்கப்படும். இதற்காக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பைபர் இணையதள சேவை தொடங்கப்படும்.

கேபிள் டி.வி. வயர் மூலமாக வழக்கமான தொலைக்காட்சி சேனல்களை பார்ப்பதுடன், அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள சேவையையும் பெற முடியும். வளர்ந்த நாடுகளில் பைபர் இணையதள சேவையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் தடையற்ற அதிவேக இணையதள சேவையை பெற முடியும்.

கட்டணம்

மாத கட்டணம் ரூ.777 செலுத்தினால் அளவற்ற தொலைபேசி அழைப்புகளுடன், 50 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 500 ஜி.பி.யும், மாத கட்டணம் ரூ.1,277 செலுத்தினால் அளவற்ற தொலைபேசி அழைப்புகளுடன், 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 750 ஜி.பி.யும் வழங்கப்படுகிறது. 10 மாத கட்டணத்தை மொத்தமாக செலுத்தினால், 12 மாதங்களுக்கு சேவையை பெற முடியும்.

இதன்மூலம் வீடுகள், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக எங்கிருந்தும் பார்க்க முடியும். மேலும் வீடுகளில் உள்ள கணினி, மடிக்கணினி, செல்போன், டி.வி. உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் வை-பை மூலம் இணைத்திட முடியும்.

இவ்வாறு சஜிகுமார் கூறினார்.

பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர்கள் சிவசைலம், சேவியர் லூர்துசாமி, கனகவேல் மற்றும் ஊழியர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். கோட்ட பொறியாளர் கோமதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்