வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

கயத்தாறில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2018-11-09 22:00 GMT
கயத்தாறு, 

கயத்தாறில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கொத்தனார். இவருடைய மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற உள்ளதையொட்டி, மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் மாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வேன் மோதி பலி

கயத்தாறு-தேவர்குளம் விலக்கு பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுபாஷ் சந்திரபோசை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த மணிகண்டனை (35) கைது செய்தார்.

மேலும் செய்திகள்