163 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் பொருத்திய ‘ஹெரிடேஜ் ரெயில்’ திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இயக்கப்படுகிறது ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம்

தென்னக ரெயில்வேயின் 163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் பொருத்திய ‘ஹெரிடேஜ் ரெயில்’ திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இயக்கப்பட உள்ளது.

Update: 2018-11-09 22:15 GMT
திருச்செந்தூர், 

தென்னக ரெயில்வேயின் 163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் பொருத்திய ‘ஹெரிடேஜ் ரெயில்’ திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

ஹெரிடேஜ் ரெயில்

இந்திய ரெயில்வே சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்காகவும் ‘ஹெரிடேஜ் ரெயில்‘ இயக்கப்படுகிறது. அதாவது, இந்த ஹெரிடேஜ் ரெயில் பழைய நீராவி என்ஜினை கொண்டு இயக்கப்படும். இதையடுத்து, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் சேலம் ரெயில்வே கோட்டங்களில் இந்த ஹெரிடேஜ் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக சென்னையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்பட்டது. அதாவது, பழமையான நீராவி என்ஜினை கொண்டு, ஒரேயொரு ரெயில் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட புதுச்சேரியில் இந்த ரெயில் இயக்கப்பட்டது.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் ஹெரிடேஜ் நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

இந்த ரெயில், திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ. தூரம் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரெயில் பெட்டியில் சுமார் 40 பேர் வரை பயணம் செய்யலாம்.

இந்த ரெயில், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. சுமார் 2 வாரங்களுக்கு இந்த ரெயில் இயக்கப்படும். பயணிகளிடம் இருந்து வரும் வரவேற்பை பொறுத்து, இந்த ரெயில் காலநீட்டிப்பு செய்யப்படலாம்.

திருச்செந்தூரை தொடர்ந்து ஹெரிடேஜ் ரெயில் திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு மதுரை கோட்ட ரெயில்வே வர்த்தக பிரிவில் மேற்கொள்ளப்படுகிறது.

163 ஆண்டு பழமையான...

இந்த ரெயில் என்ஜின் 1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. இது உலகின் புகழ்பெற்ற நீராவி என்ஜின் ‘பெய்ரி குயீன் இ.ஐ.ஆர்.21’ ரகத்தை சேர்ந்தது. 163 ஆண்டு பழமைவாய்ந்த இந்த என்ஜின் கிழக்கு ரெயில்வேயில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடியது. பின்னர், 1909-ம் ஆண்டு முதல் இந்த என்ஜின் தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுரா ரெயில்நிலையத்திலும், ஜமல்பூர் பணிமனையில் உள்ள அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், கடந்த 2010-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு, பழுதுநீக்கப்பட்டு தற்போது ஹெரிடேஜ் ரெயிலாக வலம்வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்