வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-11-09 22:00 GMT
நிலக்கோட்டை,

நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன். அவருடைய மகள் சவுமியா (வயது 21). இவருக்கும், தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கோட்டார்பட்டியை சேர்ந்த பாண்டியராஜா (32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. பாண்டியராஜா கோவையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது திருமணத்தின்போது 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை சவுமியாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மேலும் 30 பவுன் நகைகளை பெற்றோரிடம் வாங்கி வரும்படி சவுமியாவை, கணவர் பாண்டியராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சவுமியா புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணை செய்த கோர்ட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் சவுமியாவை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் பாண்டியராஜா, மாமியார் ஜோதியம்மாள் (65), மாமனார் பாண்டி (70) மற்றும் உறவினர்கள் கவிதா (35), காமராஜ் (40), வடிவேல் (35), ஐஸ்வர்யா (21) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்