ஆரல்வாய்மொழி அருகே அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி கதவை உடைக்க முடியாததால் நகைகள் தப்பின

ஆரல்வாய்மொழி அருகே அம்மன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் கதவை உடைக்க முடியாததால் நகைகள் தப்பின.

Update: 2018-11-09 22:30 GMT
ஆரல்வாய்மொழி,
இந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி நாடார் தெருவில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சுடலை மாடசாமி சன்னதியின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அம்மன் கோவில் கதவை உடைக்கும் முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. இரவு மர்ம நபர்கள் கோவில் வளாகத்திற்கு புகுந்து சுடலை மாடசாமி சன்னதி கதவை உடைத்து அதில் இருந்த சூலாயுதத்தை எடுத்துள்ளனர். பின்னர், அந்த சூலாயுதத்தை பயன்படுத்தி அம்மன் கோவில் கதவில் ஒரு பூட்டை உடைத்துள்ளனர். மற்றொரு பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர். கதவை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள நகைகள் தப்பின. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்