சென்னை புறநகரில் வீடு புகுந்து திருடிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது; 61 பவுன் பறிமுதல்

சென்னை புறநகரில் வீடு புகுந்து திருடிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-09 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் தனியாக செல்பவர்களிடமும், வீடு புகுந்தும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சாந்தகுமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கேளம்பாக்கம் சாத்தாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மின்னல் மணி (வயது 40), சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (34) என தெரியவந்தது.

கைது; நகைகள் பறிமுதல்

இவர்கள் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மணிகண்டன் மீது மதுரை, சென்னை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மணிகண்டன் பிரபல ரவுடி ஒருவனின் கூட்டாளி ஆவான்.

ரவுடி தொழிலில் ஈடுபடாமல் இருந்ததால் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு கொள்ளையடிக்க தொடங்கி உள்ளான். இவனுக்கு உதவியாக ராமச்சந்திரன் இருந்து உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகள், முகமுடிகள், கையுறைகள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்