பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது

பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

Update: 2018-11-09 22:30 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியில் பெங்களூரு- பூந்தமல்லி தேசிய நெடுஞ் சாலையையொட்டி தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான குடோன்கள் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை இந்த பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு 4 லோடு ஆட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கிய நபர்கள் குடோனுக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீசார், அந்த குடோனுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அதில் அந்த குடோனுக்குள் பண்டல், பண்டலாக தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் வந்த போலீசார், குடோனில் பதுக்கி வைத்து இருந்த 10 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இணை கமிஷனர் விஜய குமாரி, துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- கடந்த மாதம் அடையாறில் 100 கிலோ குட்காவுடன் புருசோத்தமன் என்பவர் பிடிபட்டார். அவர் பூந்தமல்லியில் செந்தில் என்பவர், ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் குட்காவை கடத்தி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் செந்திலையும், அவர் வாடகைக்கு எடுத்து உள்ள குடோனையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக வந்த லோடு ஆட்டோக்களை தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து வந்ததால் தற்போது அந்த குடோன் தெரியவந்துள்ளது. செந்தில் இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் தலைமறைவாக உள்ளார்.

தற்போது அவருடைய தம்பியான நசரத்பேட்டையை சேர்ந்த முத்துலிங்கம்(32) மற்றும் குடோனில் தங்கி வேலை செய்த ஊழியர்களான ஐசக்(20), செந்தில்(39) மற்றும் 18 வயது வாலிபர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்து உள்ளோம். அவர்களிடம் இருந்து ஒரு கார், 4 லோடு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் செந்தில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பூந்தமல்லியில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேனில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 டன் குட்காவை விரட்டிச்சென்று பிடித்தனர்.

பூந்தமல்லி பகுதியில் அதிகளவில் குட்கா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்