புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் டாஸ்மாக் பார் விவரங்களை தெரிவிக்க வேண்டும்; கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் டாஸ்மாக் பார் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-09 22:52 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த அண்ணாதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 205 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு உரிய உரிமம் பெற்று பார் வைத்து கொள்ள அனுமதி உண்டு. இதில் 150 பார்கள் அனுமதியின்றி இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தாலுகாவில் உள்ள பல டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து நடக்கும் பார்கள், உரிமம் இல்லாமல் செயல்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் பார்களை மூடவும், சட்டவிரோதமாக பார் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கும் பார்களின் விவரங்கள், அவற்றின் அமைவிடம், உரிமங்களின் காலக்கெடு குறித்தும், அனுமதி பெறாமல் இயங்கும் பார்களின் விவரங்கள் குறித்தும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 26–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்