ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தல்? போலீசார் விசாரணை

ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-10 22:15 GMT
சூளகிரி, 
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவில் வசித்து வருபவர் எல்லப்பா (வயது40). இவர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சூளகிரி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். மேலும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். எல்லப்பாவிற்கு, லட்சுமி என்ற மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி, கூலிப்படையினர் தன்னை கடத்தி சென்றதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 29-ந்தேதி நான் மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்ற போது, கோனேரிப்பள்ளி அருகே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, போலீசார் என கூறியும், விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியும் காரில் என்னை ஏற்றி சென்றனர். வழியில் என் கண்களை துணியால் கட்டிவிட்டனர். பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த பின்னர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில் சென்றபோது தான் கடத்தி செல்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து, எனது மைத்துனர் வல்லரசுவிடம் செல்போனில் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி என்னை, சித்ரவதை செய்தனர். பின்னர், ரூ.3 லட்சம் கொடுத்தால் என்னை உயிருடன் விட்டு விடுவதாக கூறினர். இதுகுறித்து, எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

பின்னர், போலீசாரின் திட்டப்படி, எனது மனைவி 3 லட்ச ரூபாய் கொண்டு சென்றபோது, மறைவாக இருந்த போலீசார், என்னை கடத்தி சென்ற கும்பலில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள், மீண்டும் என்னை அழைத்துக்கொண்டு, காரில் சென்று விட்டனர். பல்வேறு இடங்களில் சுற்றிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந்தேதி மாலை தர்மபுரி அருகே என்னை இறக்கி விட்டு சென்று விட்டனர்.

அப்போது இது சம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தால் உன்னையும், குடும்பத்தினரையும் அழித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு சூளகிரி அருகே கோட்ராலபள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தப்பா என்பவர் தான் காரணம் என்றும், அவர் தூண்டுதலின்பேரில் கூலிப்படையினர் என்னை கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர் மீதும் கூலிப்படையினர் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த பேட்டி, வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உண்மையிலேயே எல்லப்பா, பணத்திற்காக கடத்தப்பட்டாரா?, அவர் கூறுவது அனைத்தும் உண்மைதானா? அல்லது நாடகமாடுகிறாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்