சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை சுகாதார துறையினர் தகவல்

சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-11-10 22:15 GMT
தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 3 பேர் இறந்து உள்ளனர். மேலும் 37 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலர்களை பொது சுகாதார துறை மூலம் தமிழக அரசு நியமித்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு டாக்டர் இந்துமதி நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர், மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனைகளில் நேரில் ஆய்வு செய்தார்.

தீவிர நடவடிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு உத்தரவின்பேரில் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வெளியில் வரும்போது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவேண்டும். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும் நோயாளிகள் பயன்படுத்தும் கட்டில்கள், கைப்பிடிகளை கிருமி நாசினி போட்டு துடைக்கவேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், 10 நாட்களுக்கு தடுப்பு மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வேண்டுகோள்

மேலும் ஒரு வயதுக்கு கீ்ழ் உள்ள குழந்தைகள், சர்க்கரை நோய், காசநோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடலில் வேறு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ந்து மருத்துவர் களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெறவேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்