10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு விருது கலெக்டர் வழங்கினார்

நாகை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் விருதுகளை வழங்கினார்

Update: 2018-11-10 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பள்ளி கல்வித்துறையின் சார்பில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நாகையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அளவில் விருது பெற்ற 2 பள்ளிகளுக்கும், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 6 பள்ளிகளுக்கும் மற்றும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 39 பள்ளிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தி நாகை மாவட்டத்தை மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற அனைவரும் பாடுபட வேண்டும்.

டெங்கு கொசு ஒழிப்பு செயல்பாடுகளை பள்ளிகளில் சிறப்பாக கடைபிடிக்கவும், பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும். பன்முக திறன் கொண்ட மாணவர்களை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்