விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலி; மற்ற நோயாளிகளிடம் இருந்து பரவியதாக உறவினர்கள் புகார்

விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் 1½ மாதமாக சிகிச்சையில் இருந்த 6–ம் வகுப்பு மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தான். மற்ற நோயாளிகளிடம் இருந்துதான் அவனுக்கு பன்றி காய்ச்சல் பரவியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-11-10 23:30 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. அவருடைய மகன் தரணிதரன்(வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான்.

சுமார் 1½ மாதத்துக்கு முன்பு நாகமலைபுதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் தரணிதரன் படுகாயம் அடைந்தான். இதனை தொடர்ந்து அவன் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் அங்குள்ள குழந்தைகள் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் தரணிதரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு மேல் ஆகியும் காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் அங்குள்ள பன்றி காய்ச்சல் சிகிச்சை வார்டுக்கு அவன் மாற்றப்பட்டான். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சிறுவன் தரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக சென்ற சிறுவன், பன்றி காய்ச்சலுக்கு பலியானது உறவினர்கள் மட்டுமின்றி பெரிய ஆஸ்பத்திரி நோயாளிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுதொடர்பாக தரணிதரனின் உறவினர்கள் கூறும் போது, “ஆஸ்பத்திரியில் சுகாதாரம் சரியில்லாததால்தான் மற்ற நோயாளியிடம் இருந்து, பன்றி காய்ச்சல் சிறுவன் தரணிதரனுக்கு பரவி அவன் உயிரிழக்க காரணமாகிவிட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு நோயாளிகளுக்கு இதுபோன்று பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.

இதுகுறித்து பன்றி காய்ச்சல் வார்டுக்கான சிறப்பு டாக்டர் ஒருவர் கூறும் போது, “ஆஸ்பத்திரிக்கு வந்த பிறகுதான் சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள், நோயாளிகளை சந்திக்க வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் மூலமாக அந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் பரவியிருக்கலாம்“ என்றார்.

தற்போதைய நிலவரப்படி, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்