அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்திக்கு பா.ஜனதா எதிர்ப்பு மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்திக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-11-10 23:00 GMT
ஹாசன், 

அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்திக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

திப்பு ஜெயந்தி விழா

ஹாசன் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹாசனில் உள்ள கலா ஷேத்ராவில் திப்பு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை மாநில பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பா.ஜனதா எதிர்ப்பு

திப்பு சுல்தான் என்பவர் ஒரு மதத்திற்கு மட்டும் தலைவர் இல்லை. அவர் நமது நாட்டின் நன்மைக்காக அரும் பாடுபட்டவர். அதனால் அவரை நாம் அனைவரும் ஒரு மதத்தின் தலைவர் என கருதக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு மகானை நாம் நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். எனவே நாட்டுக்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களுக்குமே ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் திப்பு ஜெயந்தி விழாவை மட்டும் பா.ஜனதா கட்சி எதிர்ப்பது சரியல்ல.

நாட்டின் வளர்ச்சி

பா.ஜனதாவினர் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திப்பு சுல்தான் விவசாயம், நெசவுத்தொழில் போன்றவற்றை நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். மேலும் மதுவை தடைசெய்ய கோரி முதன் முதலாக போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய மகானை நினைவு கூறுவதில் பெருமை கொள்ள வேண்டும்.

ஆனால் பா.ஜனதாவினர் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடவிடாமல் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்பட்டால் அது கண்டிப்பாக நாட்டை ஒரு நல்ல வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது.

நன்றியுடன் நடக்கவில்லை

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முஸ்லிம்களின் வாக்குகள் கனிசமான அளவுக்கு அவர்களுக்கு கிைடத்தது தான் காரணம். ஆனால் இதற்கு பா.ஜனதா கட்சி நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் பிரீத்தம் தேகவுடா எம்.எல்.ஏ. கலந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

தேவேகவுடா பிரதமராக இருந்த போது முஸ்லிம் மக்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். மேலும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்கும் வகையில் மொராஜி தேசாய் என்னும் உண்டு உறைவிட பள்ளியை தொடங்கினார்.

அரசு சார்பில் வீடுகள்

ஹாசன் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்