கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப உத்தரவு

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் காரணமாக, மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டது.

Update: 2018-11-10 23:00 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மதியம் தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று மதியம் 1.30 மணிக் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும், புயலாக மாறினால் தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறினால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், கடலூர் மீனவர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது எனவும், ஏற்கனவே ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு தொடர்பான தகவல், ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்