பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்திய 13 பேருக்கு அபராதம்

கூடலூர் பகுதியில் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்திய 13 பேருக்கு ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-11-10 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு பல்பொருள் அங்காடிகள், ஓட்டல்கள், இறைச்சிக்கடைகள் ஆகியவற்றில் பொருட்களை கொண்டு செல்ல பாலித்தீன் பைகள் வழங்கப்படுகிறது. டீக்கடைகளில் பிளாஸ்டிக் தம்ளர்கள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்குவது கிடையாது. மாறாக சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

கூடலூர் நகராட்சி பகுதிகளில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த கூடாது என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேலும் இது குறித்து நகராட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் தடையை மீறி சிலர் பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் செந்தில்ராம்குமார், உதவியாளர்கள் குமார், தினேஷ் மற்றும் அலுவலர்கள் இறைச்சிக்கடை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்திய 13 பேருக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்