குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முதன்மை செயலாளர் வரும் நேரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-10 22:32 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ரூ.70 கோடி செலவில் பழைய குடிநீர் குழாய்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது நகரில் மொத்தம் 29 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் கூடுதலாக முன்வைப்பு தொகை பெறப்பட்டு, பழைய குடிநீர் இணைப்புகள் மாற்றப்பட்டு, புதிய திட்டத்தில் இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும் பழைய மற்றும் புதிய இணைப்புகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் முறையாக குடிநீர் வரவில்லை என்று மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் 1-வது வார்டு பகுதிகளான பாலதிருப்பதி, பால்சாமி சத்திரம், பி.வி.தாஸ் காலனி, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க பொதுமக்கள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதையடுத்து அவர், மாநகராட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மக்கள் முற்றுகையிட்டதால், அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரும், அதிகாரிகளும் சேர்ந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருசில நாட்களில் முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதிஅளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேரமாகி விட்டதால் முதன்மை செயலாளர் மாலையில் தான் வந்தார்.


மேலும் செய்திகள்