கஜா புயல் எதிரொலி: ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வருகிற 15–ந்தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2–வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

Update: 2018-11-11 22:45 GMT

ராமேசுவரம்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வருகிற 15–ந்தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2–வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

இதேபோல் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த நிலையில் புயல் சின்னத்தை காரணம் காட்டி பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடிக்க மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. இதனால் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரையிலும் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்