திருவண்ணாமலை மாவட்டத்தில் 15,481 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 481 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-11-11 23:00 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 2-ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர் ஆகிய தாலுகாக்களில் 46 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தேர்விற்காக 19 ஆயிரத்து 542 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 15 ஆயிரத்து 481 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 61 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க ஏதுவாக துணை கலெக்டர் நிலையில் 7 பறக்கும் படைகளும், 73 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் 14 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தனர்.

மேலும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்ய மாவட்டம் முழுவதும் 73 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு எழுதியவர்களையும், தேர்வு நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்தனர்.

இதனையொட்டி தேர்வு மையங்கள் உள்ள இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெற்றதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போளூர் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. போளூரில் 2 ஆயிரத்து 460 பேர் தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,999 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 461 பேர் தேர்வு எழுதவரவில்லை. இந்த பகுதியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்