கிருஷ்ணகிரியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி கைது

கிருஷ்ணகிரியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-11 22:30 GMT
கிருஷ்ணகிரி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


கிருஷ்ணகிரி பழையபேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி ராணி (வயது 58). கிருஷ்ணகிரி ராஜாஜி நகரில் ராணியின் அண்ணன் ஜோதிலிங்கம் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு ராணி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் ஜோதிலிங்கத்தின் மகனும், தொழிலாளியுமான சுரேஷ் என்பவர் வந்து அத்தை ராணியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுக்கவே 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் சுரேஷ் தான் வைத்திருந்த கத்தியால் ராணியின் கழுத்தை அறுத்தும், குத்தியும் சென்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சுரேசின் தந்தை 20 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார். அது முதல் மனநலம் பாதிக்கப்பட்டதை போல சுரேஷ் இருந்து வந்தார். மேலும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.இந்த நிலையில் தான் ராணி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்