ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்து அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.

Update: 2018-11-11 22:30 GMT
பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும் பரிசலில் நண்பர்கள், குடும்பத்துடன் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறை காரணமாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் சிலர் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

பின்னர் தொங்கு பாலம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து மிதமான அளவில் இருப்பதால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை பார்வை கோபுரம், தொங்கு பாலம் ஆகியவற்றின் வழியே கண்டு ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களில் காவிரியின் இயற்கை அழகை படம் பிடித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கலுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருந்ததால் மீன் கடைகளில் மீன் விற்பனை படுஜோராக இருந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்