ஒரத்தநாடு அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் திருமணத்துக்கு சென்று திரும்பியபோது விபத்து

ஒரத்தநாடு அருகே திருமணத்துக்கு சென்று திரும்பியபோது வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-11 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய இல்ல திருமணம் நேற்று தெலுங்கன்குடிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

பட்டுக்கோட்டை-தஞ்சை சாலையில் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பிரிவு சாலையை கடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை ஓரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதனால் வேனில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு வரும்படி அழைத்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஓடிச்சென்று வேனில் சிக்கி கொண்டவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பெரியகுமுளையை சேர்ந்த கலியமூர்த்தி (வயது65), லதா(45), குணசீலா(32), அனுசுயா(12), அனுசன்(9), ராஜாத்தி(32), சிவசாமி(60), சாவித்திரி(57), லட்சுமி(45), ரஷ்யா(42), சசிகலா(48), கயல்விழி(32), தமிழ்ச்செல்வி(40), குணவதி(45), தேவிகா(40), சபநீதா(40), ரிஷிவந்த் (7), சோபிகா(5) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் தஞ்சையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்