சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் ‘லிப்ட்டில்’ சிக்கியதால் பரபரப்பு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ திடீரென பழுதாகி நின்றது. அதில் நோயாளிகளின் உறவினர்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-11 22:30 GMT
சேலம்,
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இதனால் ஆஸ்பத்திரியில் எந்த வார்டில் பார்த்தாலும் கூட்டம் அதிகமாக காணப்படும். நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து வேறு இடத்துக்கு எளிதாக அழைத்து செல்லவும், நோயாளிகளின் உறவினர்களின் வசதிக்காகவும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் டீன் அலுவலகம் செயல்படும் மருத்துவ கட்டிடம் ஆகியவற்றில் ‘லிப்ட்’ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்திலும் ‘லிப்ட்’ வசதி உள்ளது.


இந்தநிலையில், டீன் அலுவலகம் உள்ள மருத்துவ கட்டிடத்தில் 4 மாடிகள் உள்ளன. இங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக ஏராளமானோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்ப்பதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்தி சென்று வந்தனர்.

அப்போது, 3-வது மாடிக்கும், 4-வது மாடிக்கும் இடையே ‘லிப்ட்’ திடீரென பழுதாகி நடுவில் நின்றது. இதனால் லிப்ட்டிற்குள் நோயாளிகளின் உறவினர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். எதற்காக ‘லிப்ட்’ நின்றது என தெரியாமல் அவர்கள் தவித்தனர். இதைத்தொடர்ந்து ‘லிப்ட்’ பழுதாகி நின்றது பற்றி சிலர், ஆஸ்பத்திரியில் உள்ள தங்களது உறவினர்களுக்கும், ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து சிறிது நேரத்தில் எலக்ட்ரிசீயன் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த ‘லிப்ட்’ உடனடியாக சரி செய்யப்பட்டது. அதன்பிறகே லிப்ட்டில் மாட்டிக்கொண்ட அனைவரும் நிம்மதி பெருமூச்சி விட்டு வெளியே வந்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ பழுதாகி நோயாளிகளின் உறவினர்கள் சில நிமிடங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்