உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி; தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை அமைச்சர் தகவல்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதில் தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை புரிந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-11-11 23:00 GMT
திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் முத்துப்பட்டினம் கிராமத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முத்துப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை போடப்பட்டு உள்ளது.

பிரசவ இறப்பு விகிதமும், குழந்தைகள் இறப்பு விகிதமும் இந்திய அளவில் குறைந்த அளவு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. குறிப்பாக இந்திய அளவில் 130 ஆக இருக்கக்கூடிய பிரசவ இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 62 ஆக உள்ளது. இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமாகும் . காரணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. ஒட்டு மொத்தமாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள், மாநகராட்சி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிராமப்புறங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர், தொடர்புடைய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். காய்ச்சல் என்று வந்தவுடன், அன்றே சிகிச்சை மேற்கொண்டு மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் என்று வந்தால் அது என்ன காய்ச்சல் என்று கண்டறிந்து முழுமையான முறையான சிகிச்சையை அரசு மருத்துவ மனையிலும், படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனையிலும் பொதுமக்கள் எடுத்து கொள்ள வேண்டும். பிரதமர், மத்திய சுகாதாரத்துறை மந்திரி, தமிழக கவர்னர் ஆகியோர் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டினை பாராட்டி உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்பு தான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்தியதில் கின்னஸ் சாதனை புரிந்து உள்ளது. விரைவில் இதுகுறித்த செய்தியினை முதல்-அமைச்சரிடம் தெரிவித்து வாழ்த்துகள் பெற உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் அருள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் விஜய பாஸ்கர் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.குளவாய்ப்பட்டியில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்