கூடலூரில்: அய்யப்ப பக்தர்கள் சரண கோஷ ஊர்வலம்

சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி கூடலூரில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷ ஊர்வலம் நடத்தினர்.

Update: 2018-11-11 22:30 GMT
கூடலூர்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால் அய்யப்ப பக்தர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக சன்னிதானத்துக்குள் நுழைய முடியவில்லை. மேலும் கேரளா, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அய்யப்ப பக்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக ஆன்லைன் மூலம் 530 பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் சபரிமலையின் பாரம்பரிய மற்றும் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கூடலூரில் நேற்று சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி சரண கோஷ ஊர்வலம் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். தலைவர் வாசுதேவன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் சந்திரசேகர், மனோகரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, 5 முனை சந்திப்பு மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக செவிடிப்பேட்டை சக்தி முனீஸ்வரர் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் அய்யப்பன் பல்லக்கு முன்பாக செல்ல சாமியே சரணம், அய்யப்பா சரணம் என பக்தர்கள் கோஷமிட்டவாறு சென்றனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்