வாணாபுரம் அருகே உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் பயங்கர மோதல் 7 பேர் கைது

வாணாபுரம் அருகே உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதோடு சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

Update: 2018-11-12 22:15 GMT

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சின்னாடு மகன் சுரேஷ் என்கிற கிருஷ்ணன் (வயது 33). பெங்களூருவை சையத் மகன் இலியாஸ் (20). இவர் பி.காம் படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி சதாகுப்பத்தில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு இலியாஸ் வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் கள்ளக்குறிச்சி– திருவண்ணாமலை சாலையில் சதாகுப்பம் கூட்ரோட்டில் அருகில் இலியாசுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் சிறிது நேரத்திலேயே இரு தரப்பு மோதலாக உருவெடுத்தது. அதில் இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகள், கற்களால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்ததும் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளும் மற்றும் பொதுமக்களும் பயந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தகராறு தொடர்பாக கிருஷ்ணன் தரப்பினரும் இலியாஸ் தரப்பினரும் வாணாபுரம் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். இதில் கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் அசோக் (20), வேலு மகன் மணி (21), முனியன் மகன் வெங்கடேஷ் (23), சங்கர் மகன் சிவா (21) ஆகியோரும், இலியாஸ் கொடுத்த புகாரின் பேரில் முத்து மகன் பாஸ்கர் (24), கோவிந்தன் மகன் கவுந்தரராஜன் (22) மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்