தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளிக்கு ரூ.5.52 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளிக்கு ரூ.5.52 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-11-12 23:00 GMT

தர்மபுரி,

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 1027 மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் முழுமையான பள்ளி கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக 14 வகையான பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 98.41 சதவீத மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகிறார்கள்.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளிக்கு அருகில் உள்ள தர்மபுரி வன அலுவலகத்திற்கு சொந்தமான 2.44 ஏக்கர் நிலத்தை பள்ளியின் பயன்பாட்டிற்கு வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதுவரை இங்கு செயல்பட்ட வனத்துறை அலுவலகம் செயல்படுவதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்வையார் பள்ளிக்கு ரூ.5.62 கோடி மதிப்பில் 34 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை மற்றும் சுற்றுசுவர் ஆகியவை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

விழாவில் மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், ஆறுமுகம், கோவிந்தசாமி, பழனிசாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை தெரசா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்