ஹீலகம் ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயில் அடைப்பு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தேன்கனிக்கோட்டை அருகே ஹீலகம் ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் அடைக்கப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2018-11-12 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், தேன்கனிக்கோட்டை தாலுகா கொப்பகரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொப்பகரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்கோடசின்னஹள்ளி, பலனாம்பட்டி, சிங்காரப்பேட்டை, கள்ளுகான்கொட்டாய் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள ஹீலகம் ஏரியின் மூலம் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஹீலகம் ஏரிக்கு, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காசிநாயக்கனஹள்ளி (கடவரஹள்ளி) அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கால்வாய் மூலம் வருகிறது. இந்த நிலையில் சிலர் தடுப்பணை மூலம் வந்து கொண்டிருந்த தண்ணீரை அடைத்து மிரட்டி வருகின்றனர். மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் 2 முறை சிறிய மதகு அமைத்தும், இரவு நேரங்களில் அதனை அகற்றிவிட்டனர்.

இதனால், ஹீலகம் ஏரி தண்ணீர் வராமல் வறண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காசிநாயக்கனஹள்ளி தடுப்பணையில் இருந்து தடையில்லாமல் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்