காஞ்சீபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சீபுரத்தில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-12 22:45 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. நகர், பூக்கடைசத்திரம், தாமல்வார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதுபற்றி நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நேற்று காலை குடிநீர் கேட்டு காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது காலி குடங்களுடன் சாலையின் குறுக்கே வரிசையாக அமர்ந்த பெண்கள், ‘எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கு, குடிநீர் வழங்கு, குடிநீர் பிரச்சினையை உடனே தீர்த்து வை’ என்று காஞ்சீபுரம் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் மற்றும் காஞ்சீபுரம் நகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக அந்த பகுதியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதைஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்