கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் தகவல்

கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு 10 மடங்கு குறைந்துள்ளது என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2018-11-12 23:00 GMT
சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான இடவசதிகள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்தது. இதுகுறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு 10 மடங்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு பெரியவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உடலில் டெங்கு காய்ச்சலை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி தானாக செயல்படும். ஆனால் இளம் குழந்தைகள் கடந்த ஆண்டு பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 80 படுக்கை வசதிகொண்ட 2 சிறப்பு காய்ச்சல் வார்டுகளும், 14 டாக்டர்கள் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

இந்த 2 வார்டுகளில் மொத்தம் 48 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கும், 9 பேர் பன்றி காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதத்தை விட உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்