தாம்பரம் சானடோரியம் அருகே தண்டவாளத்தில் விரிசல்; மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மின்சார ரெயில் சேவை அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-12 23:30 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேற்று காலை 8.10 மணிக்கு மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் பலத்த சத்தம் கேட்டது.

இதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை மெதுவாக இயக்கினார். பின்னர் அவர் இதுபற்றி தாம்பரம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊழியர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாள விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரெயில்களை மெதுவாக இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அரை மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். தற்காலிகமாக சரி செய்யப்பட்ட தண்டவாள விரிசலை, இரவு நேரத்தில் முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்