கஸ்தூரி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கஸ்தூரி கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-11-12 22:45 GMT
கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்கு செல்லும் ஆற்றுவாய்க்காலில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அதிரான்விடுதி கிராமத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் நாகராஜன் மற்றும் அவரது சித்தி ஆகியோரை ஆலங்குடி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கஸ்தூரி கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், கஸ்தூரி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கீரமங்கலத்தில் இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் சங்க திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். இதில் முத்தமிழ்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் பூமதி, தனலட்சுமி, மாநில துணைச் செயலாளர் கண்ணகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்